Sunday, February 16, 2014

கடலோரக் கவிதைகள்


பிரியத்தின் பேரழகி !

இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நினைத்துக் கொண்டு பேசாமல் அலைகளின் சப்தத்தில் அமிழ்ந்து போகவேண்டுமென நினைத்தேன் . உன் நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் நேற்றைப் போன்ற இரவில் என் ஏகாந்தம் எத்தனை விஷம் கூட்டிக் கொள்கிறது தெரியுமா. 

இந்தக் கடல் நம் காதலைப் போன்றே எவ்வளவு பெரிய சக்தி தெரியுமா அழகி ... இந்தக் கடல் தான் நம்பிக்கை இழந்த மனிதனின் கடைசி நம்பிக்கை. இந்த அலைகள் தான் மரணிக்கப் போகிற மனிதனை திரும்ப வாழச் சொல்லி நிர்பந்திக்கும் கடைசி ஈரம். இந்தக் கடல் தான் எனக்கும் எல்லாமே. கடல் மணலுக்கு ஒரு சக்தி இருக்கிறது. உயிரைக் குளிர்விக்கிறது. கடற் காற்றுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காதலை, காதலரை எங்கிருந்தாலும் தூக்கிக் கொணர்ந்து கடற்கரையில் ஜோடியாய் உலாவ விடுகிறது. அலைகளுக்கொரு சக்தி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் மறக்கமுடியாத அன்பை மட்டும் நினைத்துக் கொண்டு கண்மூடிக் கொஞ்ச நேரம் அலையின் விளிம்பில் கால் நனைத்துப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் அலைகளின் தெய்வீகம் ! அலைகளில் ஒரு ஆசீர்வாதமிருக்கிறது. அலைகளில் நமக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. பாறைகளும் ஏதோ சொல்ல எத்தனிக்கின்றன. இறுகிப் போன மனங்கள் ஈரம் சேர்த்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவென பாறைகள் நனைந்து கொண்டே என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.

அலையும் கடலும் பாறைகளும் காற்றும் என்னிடம் இப்படி என்னெனவோ பேசிக் கொண்டிருந்தன. நான் உன் பெயரை திரும்பத் திரும்ப அலைகளுக்குச் சொல்லி கொண்டிருந்தேன். அலைகளும் என் கால்பிடி த்துத் திரும்பச் சொல் திரும்பச் சொல் என்பதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தன. நிற்காமல் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சந்தன மணலில் உட்கார்ந்து கொண்டு ஆகாயத்திலிருந்து ஊற்றிய நீல நிறத்தில் பறந்து விரிந்திருக்கும் கடலைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். கடலின் மௌனமும் சரி. அலையின் சப்தமும் சரி. எனக்கே எனக்கு மட்டும் சில கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. எப்போதாவது நீயும் நானும் சேர்ந்து அக்கடலில் கால்நனைக்கும் போது உனக்கு மட்டும் அக்கவிதைகளை காதில் சொல்லித் தருகிறேன் பிரியத்தின் பேரரசே...

அந்தக் கடற்கரையில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழந்தை ஓடி ஓடி பச்சை வண்ணச் சங்குகளை மட்டும் சேகரித்து மடியில் வைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் கணவரும் மகனும் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றதுமே நானும் எழுந்து போய் கடல் ஈரம் காயாத சங்குகளை எடுத்துக் கொணர்ந்து ஓரிடத்தில் கொட்டினேன். என்னோட வந்திருந்த ஒரு தோழியும் எனக்கு உதவிக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நிமிடங்களில் உன் பெயரெழுதி அதன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். பள்ளி நாட்களில் வீட்டுக்கழைத்துப் போக அம்மா வருகையில் சளிப்பிடித்திருக்கும் குழந்தை ஒன்று ஐஸ்க்ரீம் வேண்டுமென அடம் பிடிக்கும் காட்சி ஏனோ என் நினைவில் உரசிப் போனது. நீ வேண்டுமென நினைக்கிற ஒவ்வொரு நேரமும் இப்படி குழந்தையாய்த் தான் ஆகிப் போகிறேன் அழகி. என்ன ஒன்று... அழுவது தான் இல்லை. சிரித்துக் கொண்டே உன்னைக் கேட்கிறேன். தரப் போகும் அம்மாக்களும் ஐஸ்க்ரீம்காரர்களும் என்ன தரப் போகிறார்களோ. ஹ்ம்ம் !

நேற்று காதலர் தினத்தின் பரிசாக "உங்க அழகிக்கு என்ன கொடுத்தீங்க பிரபா?" என்ற கேள்வியை ஐந்தாறு தோழர்களிடம்/ தோழிகளிடம் இருந்து கேட்டேன். இங்கிருந்து உனக்காக நான் தொட்டனுப்பிய மூச்சுக் காற்றும் அங்கிருந்து எனக்காக நீ தொட்டனுப்பிய மூச்சுக் காற்றும் தான் எப்போதும் நாங்கள் பரிமாறிக் கொள்கிற பரிசு என்று சொல்லி முடித்தேன். இன்றுனக்கு நிஜமாகவே ஒரு பரிசு தரவேண்டும் போலிருக்கிறது அழகி... ஒன்றல்ல நூறு.. உன் பெயரெழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சங்குகளை ஒரு பையில் போட்டு எடுத்து வந்திருக்கிறேன். என் பிரியத்தின் நூறு வண்ணமும் பச்சை. காதலிக்கு என்னெனவோ கொடுத்துக் கொண்டிருக்கும் தேசத்தில் நான் உன் பெயரெழுதிய கால் கிலோ சங்கை அள்ளிக் கொண்டு உனக்குத் தருவது வேடிக்கையான வேடிக்கை தானே அழகி !? இருந்தாலுமென்ன. உனக்குப் பிடிக்குமென்று தெரியும். பிரியத்தின் பொருட்டு நான் அள்ளிக் கொணர்ந்தவை இந்தச் சங்குகள். என்றாவது உன்னை நேரில் பார்க்கும் போது உனக்குத் தருகிறேன். உன்னோடு வைத்துக் கொள்வாய் தானே ?

ப்ரபா,
15 பிப்ரவரி 2014