Friday, July 2, 2010

அழகிய முற்றுப்புள்ளி


பிறையிடை சுமந்துநீ 
தரணிக்குத் தவறிவிழுந்த 
நிலவென்றேன்!

போய் வேற வேலையிருந்தா 
பார் ரா என்றாய் !

பார்த்த நொடியிலேயே 
பற்றித்தான் கொண்டது 
காதல் என்றேன் !

கவிதையில் பொய் எழுதிய 
காலம் போய் இன்று
பொய்யையே கவிதையாய் 
எழுத ஆரம்பித்து விட்டாயோ என்றாய் !

நாணத்தில்நீ 
நான்கு விரல்களையும் 
பிசையும் அசைவினில்
நான் பார்த்த அழகினை 
யார் பார்த்திருக்கக் கூடுமென்றேன்!


போதும் நிறுத்து உன் 
பொல்லாத பெண் பெருமையை என்றாய் !


கருப்புவானக் கூந்தலில் 
நூலில் கட்டிய கால்முழ நிலவாய் 
இடம்பிடித்திருந்த மல்லிகையைக் கேட்டேன் !


மாற்றான் தோட்டத்தில் இந்த
ம(மா)துவுடன் சேர்வதற்குத் 
தவமிருந்த கதை சொன்னது !

பூக்களின் இளவரசியின் கிரீடத்தில் 
இடம்பிடிக்க எந்த மலருக்குத்தான் 
ஆசை வராது என்று சொன்னேன் !


தாங்க முடியவில்லை!
தயவுசெய்து கவிதையை முடி என்றாய்!


கார்மேக வெள்ளைநிலா 
பார்த்திருக்கிறோம் 
வெண்மேக கருப்புநிலா 
யார் பார்த்திருக்கக் கூடும்?
நான் பார்த்திருக்கிறேன் உன் 
கண்களுக்குள் என்றேன் !


முடியலடா ! போதும் என்றாய் !
இரண்டே வார்த்தையில்!


சரி போதும் பிழைத்துப்போ !
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் !
உன் அழகிற்காய் கன்னத்திலும் 
அதை சொன்ன என் கவிதைக்கும்!  

4 comments:

  1. வெண்மேகக் கருப்பு நிலா... வாவ்...அருமை.

    please remove word verification.

    ReplyDelete
  2. தங்கள் கருத்திற்கு நன்றி கலா நேசன் அண்ணா!
    " word verification " உங்கள் விருப்பப் படியே நீக்கிவிட்டேன் !

    ReplyDelete
  3. //வெண்மேக கருப்புநிலா//


    //முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் !
    உன் அழகிற்காய் கன்னத்திலும்//

    ரசித்த இடங்கள்.. கவிதை அருமை.

    ReplyDelete